அண்டை மாநிலங்களில் வைக்கோல் எரிப்பு டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு
அண்டை மாநிலங்களில் வைக்கோல் எரிப்பு டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு
ADDED : நவ 07, 2025 01:35 AM

டில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட வயல்களும் வைக்கோல்களும் எரிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இதனால் டில்லியில் காற்றின் தரம் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
டில்லியில் காற்றின் தரம் படிப்படியாக மோசமடைந்து வருகிறது. மோசமான வானிலையுடன் தான் நேற்று காலையே நகர மக்களுக்கு விடிந்தது. காலை வேளையில் காற்றின் தரம் சராசரியாக 278 என்ற மோசமான அளவில் இருந்தது.
செயற்கைக்கோள் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, 311 என்ற மிக மோசமான நிலையை எட்டியது.
அடுத்த ஆறு நாட்களும் படுமோசமான நிலையை வானிலை எட்டும் என, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கணித்துள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் தங்கள் வயல்களை விவசாயிகள் எரிப்பதால், டில்லியில் மாசுபாடு அதிகரிப்பது, தொடர்கிறது.
செயற்கைக்கோள்களின் தரவுகளின் படி, புதன்கிழமை மட்டும் பஞ்சாபில் 94 வைக்கோல் எரிப்பு நிகழ்வுகளும், ஹரியானாவில் 13, உத்தரபிரதேசத்தில் 74 நிகழ்வுகளும் அடையாளம் காணப்பட்டன.
டில்லியின் காற்று மாசுபாட்டுக்கு, வைக்கோல் மற்றும் வயல் எரிப்பு நிகழ்வுகள் 21.5 சதவீத காரணியாக அமைந்திருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பிட்டு உள்ளது.
இதுவே இன்று 36.9 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், சனிக்கிழமை 32.4 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் காற்றுதர மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ராஜேஷ் வர்மா தலைமையிலான குழுவினர் நேற்று பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கிரீம்ஸ் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தபோதும், வயல் எரிப்பு நிகழ்வுகளும் தொடர்கின்றன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 67 சதவீத வயல் எரிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளதாக, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிரீம்ஸ் (CREAMS) ஆய்வகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
இதுவே செப்டம்பர் 15 முதல் நவம்பர் 4ம் தேதி வரையில் 48.7 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விபரங்களுடன் பட்டியலை கிரீம்ஸ் வெளியிட்டுள்ளது.
- நமது நிருபர் -

