ADDED : பிப் 20, 2024 07:05 AM

தீ விபத்து பாதுகாப்பு
பெங்களூரில் வாசனை திரவிய தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் சட்டசபையில் எதிரொலித்தது. எதிர்க்கட்சித் தலைவர் அசோக், உறுப்பினர் சோமசேகர் ஆகியோர், 'குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்று சட்ட விரோதமான தொழிற்சாலைகள் செயல்படுகிறது. பொதுமக்கள் அச்சத்தில் வசிக்கின்றனர்' என்றனர்.
இதற்கு வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா பதிலளிக்கையில், ''பெங்களூரில் தீ விபத்திலிருந்து பாதுகாக்க, அரசு முக்கியத்துவம் அளிக்கும்,'' என்றார்.
கணக்காளர் பதவி
குந்தாபூர் எம்.எல்.ஏ., கிரண் குமார் கேள்விக்கு பதிலளித்து வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறுகையில், ''வருவாய் துறையில், 1,000 கிராம கணக்காளர் பதவியை நிரப்ப, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இதில் அரசியல் எதுவும் இல்லை. குந்தாபூரில் வருவாய் துறையில் காலியாக இருந்த 110 இடங்களுக்கு, 70 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. மற்ற பதவிகள் விரைவில் நிரப்பப்படும்,'' என்றார்.
ஒரு நிமிடம்... ஒரு நிமிடம்!
சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசுகையில், ''ஆளும் காங்கிரஸ் அரசு, அனைத்து தொகுதிகளுக்கும் நிதி வழங்கி உள்ளது. ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை,'' என்றார்.
அப்போது முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை எழுந்து, பேச முற்பட்டார். அதற்கு பா.ஜ., உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் எத்னால் எழுந்து, 'ஒரு நிமிடம்... ஒரு நிமிடம்... நான் பேசுகிறேன்' என்றார். அதற்கு பசவராஜ் பொம்மை, 'உங்களுக்காக தான், நான் பேசுகிறேன்' என்றார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.
அமைச்சருக்கு அறிவுரை
சட்டசபையில் கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் எத்னால், 'எனது தொகுதியில் 1.20 லட்சம் சிறுபான்மையினர் உள்ளனர். ஆனால் எனக்கு பணம் விடுவிக்கப்படவில்லை' என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜமிர் அகமது கான், 'சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக நீங்கள் பாடுபடவில்லை. பர்தா, தொப்பி அணிந்தவர்கள் எங்கள் அருகில் வர வேண்டாம் என்று சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்' என்றார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். குறுக்கிட்ட சபாநாயகர் காதர், கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி, அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.
பா.ஜ.,வுக்கு கண்டிப்பு
சட்ட மேலவையில், கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சிதானந்த கவுடா, உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, குறுக்கிட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, 'கேள்வி நேரத்தில் அது பற்றி இங்கு பேச வேண்டாம்' என்றார். ஆனாலும், சிதானந்த கவுடா தொடர்ந்து பேசும் போது, 'உனக்கு பேச கொடுத்ததே தவறாகிவிட்டது' என்று கூறி, அவரை தடுத்தார்.
அருமையான படம்
சட்டமேலவையில், வனத்துறை தொடர்பாக, பா.ஜ., உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நாயக் கேள்வி எழுப்பினார்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே வராததால், அவரது பதில் அடங்கிய காகிதம் வழங்கப்பட்டது. காகிதத்தில் இருந்த அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேயின் படத்தை பார்த்த, பிரதாப் சிம்ஹா நாயக், 'அமைச்சரின் படம் அருமையாக உள்ளது. அதுபோன்று அருமையான பதில் அளித்தால் நன்றாக இருக்கும்' என்றார். இதை கேட்ட உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.
துண்டு சீட்டு
சட்டமேலவையில், விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, துண்டு சீட்டு எழுதி, சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைமை கொறடா ரவிகுமாருக்கு அனுப்பினார். அதை பிரித்து பார்த்ததும் அவரும், மேலவை தலைவரும் சிரித்துக் கொண்டனர்.

