ஒப்பந்ததாரர்கள் தொல்லையால் உதவி பொறியாளர் தற்கொலை கடிதம்
ஒப்பந்ததாரர்கள் தொல்லையால் உதவி பொறியாளர் தற்கொலை கடிதம்
ADDED : செப் 26, 2026 07:44 PM
கதக்: கர்நாடகாவில், குடிநீர் திட்ட பணிகளுக்கு மாநில அரசு மானியம் வழங்காததால், ஒப்பந்ததாரர்கள் கொடுத்த தொல்லையை சமாளிக்க முடியாமல், அரசு உதவி பொறியாளர் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி விட்டு தலைமறைவாகிவிட்டார்.
கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் உள்ள, கே.ஐ.ஆர்.டி.எல்., எனப்படும், கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மாவட்ட துணை பொறியாளர் பர்வீஸ், 44. அரசு ஊழியரான இவர், பெங்களூரில் நடக்கும் முக்கிய நிகழ்வில் பங்கேற்க செல்வதாக தன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு கடந்த 13ம் தேதி வீட்டை விட்டு சென்றார்.
ஆனால், அவர் இதுவரை வீடு திரும்பவில்லை; அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் கடந்த 16ம் தேதி புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், பர்வீஸ் எழுதிய கடிதத்தை, அவரது வீட்டில் போலீசார் கண்டெடுத்தனர். அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
குடிநீர் திட்ட பணிகளுக்கான கோடிக்கணக்கான ரூபாய் மானியத்தை மாநில அரசு விடுவிக்கவில்லை. இதனால், ஒப்பந்ததாரர்கள் பலரும் பணத்தை தரும்படி எனக்கு தொல்லை கொடுத்தனர்.
இது எனக்கு மன அழுத்தத்தை கொடுத்தது. என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்து கொள்கிறேன். என் மரணத்திற்கு நானே பொறுப்பு. இந்த சூழ்நிலையை கையாள தவறிவிட்டேன். ஒப்பந்ததாரர் யாரும் என்னுடைய குடும்பத்தினருக்கு தொல்லை கொடுக்க வேண்டாம். என் பதவியில் வேறு யாராவது ஒருவரை நியமித்து கொள்ளுங்கள். தயவுசெய்து மானியத்தை விடுவியுங்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், பர்வீஸ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எங்கேயும் தலைமறைவாக இருக்கிறரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
