'அஸ்வமேதா' பஸ்களுக்கு வரவேற்பு புதிய வழித்தடங்களில் இயக்க திட்டம்
'அஸ்வமேதா' பஸ்களுக்கு வரவேற்பு புதிய வழித்தடங்களில் இயக்க திட்டம்
ADDED : டிச 06, 2024 06:43 AM

பெங்களூரு: சிவப்பு நிறம் கொண்ட பஸ்களுக்கு, புதிய வடிவம் கொடுத்து இயக்கப்படும் அஸ்வமேதா பஸ்களுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெங்களூரு அருகில் உள்ள நகரங்களில், அஸ்வமேதா பஸ்களை அறிமுகம் செய்ய கே.எஸ்.ஆர்.டி.சி., தயாராகிறது.
கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
ஏற்கனவே கோலார், துமகூரு, ஆனேக்கல், ராம்நகர், கனகபுரா, சென்னப்பட்டணா, மாண்டியா, சிக்கபல்லாப்பூர் உட்பட பல்வேறு நகரங்களுக்கு, 'அஸ்வமேதா ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு, பயணியரிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பெங்களூரின் 100 கி.மீ., தொலைவில் உள்ள நகரங்களுக்கு, பஸ்களை அறிமுகம் செய்ய கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்து உள்ளது.
எந்தெந்த வழித்தடங்களில், அஸ்வமேதா பஸ்கள் இயங்கினால், பயணியருக்கு உதவியாக இருக்கும் என, கே.எஸ்.ஆர்.டி.சி., ஆய்வு செய்கிறது.
சாதாரண பஸ்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருக்கைகள் நடுவே இடைவெளி மற்றும் பஸ்களின் உயரம் அதிகமாக்கப்பட்டது. இதனால், பயணியர் தாராளமாக அமர்ந்து பயணிக்கலாம்.
நடப்பாண்டு பிப்ரவரியில், 750 அஸ்வமேதா பஸ்கள் கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் சேர்க்கப்பட்டன.
இந்த பஸ்கள், 'பாயின்ட் டூ பாயின்ட்' சேவை வழங்குகின்றன. அதிகமான நிறுத்தங்களில் நிற்காமல், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயண நேரம் குறைகிறது.
இத்தகைய பஸ்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், அஸ்வமேதா பஸ்களை தரம் உயர்த்த கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் பெங்களூரின் 100 கி.மீ., சுற்றுப்பகுதியில் உள்ள நகரங்களுக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.