ஆந்திராவில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
ஆந்திராவில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
UPDATED : நவ 01, 2025 02:35 PM
ADDED : நவ 01, 2025 12:52 PM

அமராவதி: ஆந்திராவில் வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப்
பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரா சுவாமி கோவில்
உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலுக்கு தினமும்
ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் இன்று ஏகாதசி
பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள்
பங்கேற்றனர்.
அப்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த
நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து
நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினருக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல்
தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
கூறியிருப்பதாவது: ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில்
ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர
சம்பவத்தில் பக்தர்களின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது.
இறந்தவர்களின்
குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டுள்ளேன். சம்பவ இடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு
சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

