சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை; உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை
சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை; உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை
ADDED : நவ 01, 2025 10:52 AM

ரியாத்: சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் விஜய் குமார் மஹதோ போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் துதாபானியா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார் மஹதோ, 27. இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா சென்றார்.
ஜெட்டா நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் டவர் லைன் பிட்டராக பணியாற்றி வந்தார். சவுதி அரேபியாவில் உள்ளூர் போலீசாருக்கும், மதுபானம் கடத்தல் கும்பலுக்கும் இடையே மோதல் நடந்தது.
அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், அந்த வழியாக சென்ற இந்திய இளைஞர் விஜய் குமார் மஹதோ மீது குண்டு பாய்ந்தது. பின்னர் உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜய் குமார் மஹதோ உயிரிழந்தார். முன்னதாக, துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த பிறகு, விஜய் குமார் மஹதோ தனது மனைவிக்கு, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார்.
அவர் அந்த வாய்ஸ் மெசேஜ்யில் ஒரு துப்பாக்கிச்சூட்டில் சிக்கி காயம் அடைந்ததாக கூறியுள்ளார். தற்போது சிகிச்சை பலன் அளிக்காமல் விஜய் குமார் மஹதோ உயிரிழந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் மனம் உடைந்தனர். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரவும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சவுதி அரேபியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் விஜய் குமார் மஹதோவுக்கு மனைவி தேவி, மகன்கள் ரிஷி குமார் (5), ரோஷன் குமார் (3), அவரது தந்தை சூரியநாராயண் மஹதோ மற்றும் தாயார் சாவித்ரி தேவி ஆகியோர் உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

