மகளிர் உதவித்தொகை ரூ.2500 உடனே தரணும்; டில்லி முதல்வருக்கு அதிஷி வலியுறுத்தல்
மகளிர் உதவித்தொகை ரூ.2500 உடனே தரணும்; டில்லி முதல்வருக்கு அதிஷி வலியுறுத்தல்
ADDED : மார் 07, 2025 04:49 PM

புதுடில்லி: மகளிருக்கான உதவித்தொகை ரூ.2500ஐ உடனடியாக வழங்க வேண்டும் என்று டில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு எதிர்க்கட்சி தலைவரான அதிஷி கடிதம் எழுதி உள்ளார்.
டில்லி சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியை பெற்று ஆட்சியில் பா.ஜ., அமர்ந்துள்ளது. முதல்வராக ரேகா குப்தா உள்ளார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை மாதம்தோறும் வழங்கப்படும் என்று பா.ஜ., வாக்குறுதி அளித்து இருந்தது.
இந் நிலையில் வாக்குறுதி அளித்தவாறு ரூ.2500ஐ உடனடியாக வழங்கவேண்டும் என்று டில்லி மாஜி முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான அதிஷி வலியுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் முதல்வர் ரேகா குப்தாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது;
பா.ஜ., அரசு அமைந்ததும், மாதம்தோறும் ரூ.2500 வழங்கும் திட்டம் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அங்கீகரிக்கப்படும், மகளிர் தினத்தன்று பெண்கள் கணக்குகளுக்கு நிதி சென்றடையும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்து இருந்தார்.
மகளிர் தினத்துக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், டில்லி முழுவதும் உள்ள பெண்கள் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
உறுதி அளித்தவாறு, முதல் தவணை தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு பெண்ணும் உங்களை நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அதிஷி கூறி உள்ளார்.