சீனாவிடம் இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்: டிரம்ப் புலம்பல்
சீனாவிடம் இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்: டிரம்ப் புலம்பல்
ADDED : செப் 05, 2025 04:56 PM

வாஷிங்டன்: '' இந்தியாவையும், ரஷ்யாவையும், மோசமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம்,'' அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பி உள்ளார்.
அமெரிக்கா அதிபர் இரண்டு காரணங்களுக்காக இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.இரண்டாவதாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்த நிதியை பயன்படுத்தி கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடனான போரை ரஷ்யா நீட்டித்து வருகிறது என டிரம்ப் குற்றம்சாட்டினார். இந்த இரண்டாவது காரணத்துக்காக, இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. கூடுதல் வரியும் அமலுக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இச்சூழ்நிலையில், பிரதமர் மோடி சீனா பயணம் மேற்கொண்டார். அங்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை நேரில் சந்தித்து தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிலும் 3 பேரும் ஒன்றாக வந்தனர். மாநாட்டின் இடையே 3 பேரும் கலந்துரையாடினர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகின.
இதனை பார்த்ததும் அமெரிக்கா அமைச்சர்கள் முதல் டிரம்ப்பின் ஆலோசகர் வரை பலரும பல வகையில் புலம்பி வருகின்றனர். ஆளுக்கொரு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்தபடியாக டிரம்ப் வெளியிட்ட பதிவு ஒன்றில், '' இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம் போல் இருக்கிறது. அவர்கள் நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை கொண்டு இருக்கட்டும், '' என தெரிவித்துள்ளார்.