கேரள அமைச்சர் மீது தாக்குதல்: காங்., மாணவர் அணியால் களேபரம்
கேரள அமைச்சர் மீது தாக்குதல்: காங்., மாணவர் அணியால் களேபரம்
UPDATED : பிப் 26, 2026 11:46 AM
ADDED : பிப் 26, 2026 06:16 AM

கன்னுார்: கேரளாவின் கண்ணுாரில் காங்கிரஸ் கட்சியின் கேரள மாணவர் சங்கம் நடத்திய போராட்டத்தின் போது, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் கை, மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகளில், கடந்த சில நாட் களாக நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என, எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.
மருத்துவமனைகளில் அலட்சியப் போக்கு நிலவுவதால், நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் விமர்சித்து வருகிறது. மேலும், பினராயி விஜயன் அரசை கண்டித்தும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜை கண்டித்தும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வந்தே பாரத் ரயிலை பிடிப்பதற்காக கண்ணுார் ரயில் நிலையத்திற்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று பிற்பகல் வந்தார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாணவ அமைப்பான கேரள மாணவர் சங்கத்தினர் கருப்புக் கொடியுடன் அவரை முற்றுகையிட்டு போராட முயன்றனர். உஷாரடைந்த போலீசார், மாணவ அமைப்பினரை தடுக்க முயன்றதால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், அமைச்சர் வீணா ஜார்ஜின் கை மற்றும் கழுத்து பகுதிகளில் உள்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ரயில் பயணத்தை ரத்து செய்த அமைச்சர் வீணா ஜார்ஜ், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''அமைச்சர் வீணா ஜார்ஜ் காயமடைந்ததற்கு காங்கிரஸ் தலைமையே பொறுப்பேற்க வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார்.

