துணை ராணுவப்படை வாகனம் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய குற்றவாளி கைது
துணை ராணுவப்படை வாகனம் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய குற்றவாளி கைது
ADDED : செப் 24, 2025 03:40 PM

இம்பால்: துணை ராணுவப்படை வாகனம் மீது தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளியை மணிப்பூர் போலீசார் இன்று கைது செய்தனர்.
செப்டம்பர் 19 அன்று மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படையினரின் வாகனம் மீது ஆயுதமேந்திய குழு, தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துணை ராணுவப்படையின் 2 ஜவான்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தி, பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மணிப்பூர் டிஜிபி ராஜீவ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:
தாக்குதல் நடத்திய பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர் தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) பிணையில் விடுவிக்கப்பட்ட உறுப்பினர் என்று ஒப்புக்கொண்டார்.
'கமெங் பகுதியில் ஆயுதமேந்திய பயங்கரவாதி இருப்பது குறித்த குறிப்பிட்ட தகவல் கிடைத்ததும், இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர் மாவட்ட காவல்துறை, 33 ஏஆர் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் அடங்கிய குழு செப்டம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கையின் போது, கோம்ட்ராம் ஓஜித் சிங் கெய்லால் 47, என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு ராஜீவ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.