மேற்கு வங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா அரசுக்கு பா.ஜ., கடும் கண்டனம்
மேற்கு வங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா அரசுக்கு பா.ஜ., கடும் கண்டனம்
ADDED : ஜன 13, 2024 12:30 PM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் சாதுக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் சாதுக்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது. சாதுக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., ஆளும் திரிணமுல் காங்கிரசை கடுமையாக சாடியுள்ளது.
பயங்கரவாதிக்கு அரசு பாதுகாப்பு
இது குறித்து பா.ஜ., ஐ.டி., குழு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் சாதுக்கள், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய குற்றவாளிகளால் தாக்கப்பட்டனர். மம்தா பானர்ஜியின் ஆட்சியில், ஷாஜஹான் ஷேக் போன்ற பயங்கரவாதிக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் சாதுக்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இந்துவாக இருப்பது குற்றம். இவ்வாறு அந்த பதிவில் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு
இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் சாதுக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை என்ன?. விசாரணை அமைப்புகள் அதிகாரிகள் முதல் சாதுக்கள் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை. இது தான் மேற்குவங்கத்தின் அதிர்ச்சியான நிலை. இவ்வாறு அவர் கூறினார்.