ADDED : மார் 18, 2024 05:42 AM

ககலிபுரா, : கொலை வழக்கில் ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்ற போது, போலீஸ் ஏட்டு மீது ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்ப முயன்ற, ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
பெங்களூரு ஜெ.பி.,நகரில் வசிப்பவர் சோமேஷ் 50. ரவுடியான இவர் மீது ஜெ.பி.நகர், மடிவாளா உட்பட பல போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 15 வழக்குகள் உள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, ககலிபுராவில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக, சோமேஷை ககலிபுரா போலீசார், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய, நேற்று முன்தினம் இரவு ககலிபுரா அழைத்து சென்றனர்.
மண்ணில் புதைத்து வைத்திருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது, ஆயுதங்களை பறித்து, ஏட்டு மஹாதேவய்யாவை, சோமேஷ் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார். அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சுந்தர், வானத்தை நோக்கி, ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டு சரண் அடையும்படி, எச்சரித்தார்.
சரண் அடைய மறுத்ததுடன், மஹாதேவய்யாவை மீண்டும் தாக்க முயன்றார். இதனால் சோமேஷ் வலது காலில், சுந்தர் துப்பாக்கியால் சுட்டார். சுருண்டு விழுந்தவர் கைது செய்யப்பட்டார். சோமேஷும், மஹாதேவப்பாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

