தலைமை நீதிபதியை தாக்க முயற்சி சுப்ரீம் கோர்ட் அறையில் அதிர்ச்சி
தலைமை நீதிபதியை தாக்க முயற்சி சுப்ரீம் கோர்ட் அறையில் அதிர்ச்சி
ADDED : அக் 07, 2025 06:11 AM

புதுடில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, வழக்கறிஞர் உடையில் இருந்த நபர் காலணி வீசி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை வழக்கம் போல விசாரணை பணிகள் துவங்கின.
அப்போது வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்த நபர் ஒருவர், திடீரென எழுந்து, 'சனாதன தர்மத்தை அவமதித்தால் இந்த நாடு சகித்துக் கொள்ளாது' என, கூச்சலிட்டபடியே, தன் காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி எறிய முயன்றார்.
அப்போது, அருகில் இருந்த காவலர்கள், உடனடியாக அதை கவனித்து, அந்த நபரை மடக்கி பிடித்து, வெளியே இழுத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதே சமயம், இதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த தலைமை நீதிபதி கவாய், வழக்கறிஞர்களை நோக்கி வாதங்களை துவங்கும்படி பணித்தார்.
மேலும், ''இவற்றால் கவனத்தை சிதறவிடக் கூடாது. இது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னை பாதிக்காது,'' என்றார்.