இதுக்கு முடிவே கிடையாதா ஆபீஸர்; தினமும் நடக்குது ரயில் கவிழ்ப்பு சதி: மஹாராஷ்டிராவில் திக்...திக்...
இதுக்கு முடிவே கிடையாதா ஆபீஸர்; தினமும் நடக்குது ரயில் கவிழ்ப்பு சதி: மஹாராஷ்டிராவில் திக்...திக்...
ADDED : செப் 11, 2024 09:39 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் சோலாப்பூரில் இன்று(செப்.,11) ரயில் தண்டவாளத்தில் பெரிய சிமென்ட் தடுப்பு வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி நடத்தப்பட்டது. டிரைவரின் எச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு, உ.பி.,யின் பிரயாக்ராஜில் இருந்து ஹரியானாவின் பிவானிக்கு, காலிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் இரவு, வேகமாக சென்று கொண்டுஇருந்தது. கான்பூருக்கு அருகே, சிவ்ராஜ்பூர் என்ற இடத்திற்கு வந்த போது, தண்டவாளத்தில் சில பொருட்கள் இருப்பதை ரயில் டிரைவர் பார்த்தார்; உடனே அவர், ரயிலை, 'சடன் பிரேக்' போட்டு நிறுத்த முயன்றார்.
எனினும், தண்டவாளத்தில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. இதில் காஸ் சிலிண்டர் துாக்கி வீசப்பட்டது. சிலிண்டர் வெடிக்காததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல், ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் ரயில் வழித்தடத்தில் இரண்டு சிமென்ட் ஸ்லாப்களை வைத்து, சரக்கு ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நேற்று (செப்.,10) மத்திய பிரதேசம்!
மத்தியபிரதேச மாநிலத்தில் ஜபல்பூர்-இட்டார்சி ரயில் வழித்தடத்தில் குராம்கேடி என்ற பகுதியில் தண்டவாளத்தில் டிராக்டர் நிறுத்தப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ச்சி அடைந்த டிரைவர், உடனடியாக சுதாரித்து பிரேக்கை இயக்கினார். இதன் காரணமாக டிராக்டர் மீது மோதாமல் ரயில் அங்கேயே நின்றது. டிரைவரின் சமயோசிதம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இன்று (செப்.,11) மஹாராஷ்டிரா!
மஹாராஷ்டிராவின் சோலாப்பூரில் இன்று(செப்.,11) ரயில் தண்டவாளத்தில் பெரிய சிமென்ட் தடுப்பு வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி நடத்தப்பட்டது. லோகோ பைலட்டின் எச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ரயில்வேயின் மூத்த பிரிவு பொறியாளர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று தினங்களாக சரக்கு ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் நடந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் ரயில் கவிழ்க்கும் முயற்சி அதிகரித்து வருவதாக ரயில்வே நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது