ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
UPDATED : அக் 06, 2025 11:08 AM
ADDED : அக் 06, 2025 07:59 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் ஐசியுவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) வார்டில் 11 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். இந்த தீ விபத்தில் நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது: ஐசியுவில் ஒரு ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவியது. தீ விபத்து ஏற்பட்ட போது ஐசியுவில் 11 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கோமா நிலையில் இருந்தனர். தீ விபத்துக்கு பிறகு, உடனடியாக அவர்களை டிராலிகளில் மீட்டு, முடிந்தவரை பல நோயாளிகளை ஐசியுவிலிருந்து வெளியே கொண்டு வந்தோம்.
பின்னர் நீண்ட நேரம் போராடி சிகிச்சை அளித்தோம். CPR மூலம் அவர்களை உயிர்ப்பிக்க நாங்கள் மிகவும் கடினமாக முயற்சித்தோம், ஆனால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். இறந்த நோயாளிகளில், இரண்டு பேர் பெண்கள், நான்கு பேர் ஆண்கள் ஆவர். ஐந்து நோயாளிகள் இன்னும் கவலைக்கிடமாக உள்ளனர். இவ்வாறு மருத்துவமனை நிர்வாக தெரிவித்துள்ளது.