ADDED : ஆக 06, 2025 03:06 AM

திருவனந்தபுரம் : பிரிட்டனில் கள் விற்பனை செய்ய, கேரள மாநில கள் வாரியம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கேரளாவில், 'கள்' விற்பனையை அனுமதித்து அரசின் கள் தொழில் மேம்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. இந்தியா - பிரிட்டன் இடையே உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், கேரள கள்ளை பிரிட்டனில் விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவாவின், 'பென்னி' மற்றும் நாசிக்கின், 'ஒயின்' பிரிட்டனில் விற்பனை செய்யப்படுவது போல கேரளாவின் கள் விற்பனை பிரிட்டனில் விரைவில் துவங்கும் என, கேரள மாநில கள் வாரிய தலைவர் ஜோசப் தெரிவித்துள்ளார்.
தென்னை அல்லது பனை மரத்தில் இருந்து இறக்கியவுடன், மூன்று நாட்களுக்கு தான் கள்ளை பயன்படுத்த முடியும். அதன்பின் கெட்டுப்போகும். எனவே, குணம் மற்றும் ஆல்கஹால் தன்மை மாறாமல் ஒன்று முதல் 12 மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை வழங்க, தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு கள் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில், பாட்டிலில் அடைக்கப்பட்ட கேரள மாநில கள் பிரிட்டனில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.