ADDED : பிப் 22, 2024 05:32 PM

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்று அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கான பழிவாங்கும் முயற்சியாகும் என ஆம்ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து டில்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி கூறியதாவது: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மேலும் ஒரு முறைகேடான சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறையின் ஒவ்வொரு சம்மன் மீதும் சட்ட ரீதியான கேள்விகளை எழுப்பி உள்ளோம். ஆம் ஆத்மியை பா.ஜ., அச்சுறுத்தி வருகிறது. கெஜ்ரிவாலுக்கு இன்று அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கான பழிவாங்கும் முயற்சியாகும்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்காக அமலாக்கத்துறையால் ஏன் காத்திருக்க முடியவில்லை. அமலாக்கத்துறை சம்மன்களைக் கண்டு ஆம் ஆத்மி கட்சியும் கெஜ்ரிவாலும் பயப்படப் போவதில்லை. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.