மூணாறு கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி; காவலாளியை தாக்கி தப்பிய திருடன்
மூணாறு கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி; காவலாளியை தாக்கி தப்பிய திருடன்
ADDED : மார் 16, 2025 07:08 AM

மூணாறு; மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற திருடன் காவலாளியை தாக்கி விட்டு தப்பிச் சென்று அருகில் உள்ள வீட்டிலும் கைவரிசையை காட்டிச் சென்றான்.
மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்குச் சென்ற திருடன் பகல் நேர காவலாளி பழனிசாமி தங்கி இருந்த அறையை வெளிப்புறமாக தாளிட்டு விட்டு கோயில் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்தான். அப்போது அருகில் உள்ள மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த இரவு நேர காவலாளி மாடசாமி 60, உண்டியல் உடைத்த சப்தம் கேட்டு சென்றவர் கோயிலுக்குள் திருடனை பார்த்து கூச்சலிட்டார். சுதாரித்துக் கொண்ட திருடன் மாடசாமியை கம்பியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றான்.
அப்போது அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரவு கூர்கா திருடனை பிடிக்க முயன்றபோதும், அவரை தாக்கி விட்டு தப்பினான்.
திருடன் தாக்கியதில் காயமடைந்த மாடசாமி கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா, எஸ்.ஐ. அஜேஷ் கே. ஜான் ஆகியோர் தலைமையில் போலீசார் திருடன் தப்பிச் சென்ற பகுதி முழுவதும் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அதிகாலை 4:00 மணிக்கு கோயில் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு மீண்டும் வந்த திருடன் பூட்டியிருந்த ராஜேஷின் வாடகை வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றான். அங்கு எதுவும் சிக்கவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது திருட்டு முயற்சியில் ஈடுபட்டது வட மாநில இளைஞர் என தெரியவந்தது. இடுக்கியைச் சேர்ந்த போலீஸ் மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடங்களில் ஆய்வு நடத்தினர்.
தப்பியது: ஏற்கனவே கோயிலிலுக்குச் சென்ற திருடன் அங்கு காவலாளி உள்ளிட்டோரின் நடவடிக்கைகளை கண்காணித்து இரவில் திருடச் சென்றுள்ளான்.
பகல் நேர காவலாளியின் அறையை பூட்டிய திருடனுக்கு இரவு நேர காவலாளியை குறித்து தெரியவில்லை.
தக்க சமயத்தில் இரவு நேர காவலாளி சென்றதால் உண்டியல் பணம் தப்பியது.
இந்து தேவஸ்தானம் துணைத் தலைவர் கணேசன் கூறுகையில்., கோயிலில் மூன்று உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு உண்டியலில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது.
உண்டியல்களை சோதனையிட்ட பிறகு திருடு போன பணம் குறித்து தெரிய வரும், என்றார்.

