ADDED : டிச 01, 2024 03:56 AM
போதிய அவகாசம் அளித்தும், பல ஆண்டுகளாக சொத்து வரி பாக்கி வைத்துள்ளோர், வரி செலுத்தாததால், 2.32 லட்சம் சொத்துகளை ஏலம் விட, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி வருவாய்ப்பிரிவு சிறப்பு கமிஷனர் முனிஷ் மவுத்கில் கூறியதாவது:
சொத்து வரி பாக்கி வைத்துள்ளோர்களின் வசதிக்காக, 'ஒன் டைம் செட்டில்மென்ட்' சலுகை அளிக்கப்பட்டது. நவம்பர் 30க்குள் வரி பாக்கியை முழுமையாக செலுத்தினால், அபராதம் மற்றும் வட்டியை ரத்து செய்யும் சலுகையை, மாநகராட்சி அளித்திருந்தது.
இந்த திட்டத்தின் கீழ், வரி செலுத்த எட்டு மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த அவகாசம் இன்றுடன் (நேற்று) முடிந்தது. எனவே டிசம்பர் 1 முதல் இரட்டிப்பு அபராதம், வட்டி வசூலிக்கும் பணி துவங்கும்.
சிறப்பு சலுகை அளித்தும், பல ஆண்டுகளாக வரி பாக்கி வைத்துள்ளோரின் சொத்துகளை, ஜப்தி செய்து அவற்றை ஏலம் விட்டு, வரியை வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.
பெங்களூரு மாநகராட்சி சட்டத்தில், ஏலம் விட அனுமதி உள்ளது. சொத்துதாரர்களுக்கு நோட்டீஸ் அளித்து, சொத்துகள் ஏலம் விடப்படும். ஏற்கனவே அதிக அளவில் சொத்து வரி பாக்கி வைத்துள்ள 82,000 சொத்து உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளை, மாநகராட்சியின் வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளோம். 6,000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து, ஜப்தி செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டத்தில் அசையும், அசையா சொத்துகளை ஏலம் விட, நடவடிக்கை எடுத்துள்ளோம். 2.32 லட்சத்துக்கும் அதிகமான சொத்துகளிடம் இருந்து, மாநகராட்சிக்கு 600 கோடி ரூபாய் வரி பாக்கி வர வேண்டியுள்ளது.
நடப்பாண்டு 5.12 லட்சம் சொத்துதாரர்கள் வரி பாக்கி வைத்துள்ளனர். எந்த காரணத்தை கொண்டும், ஒன் டைம் செட்டில்மென்ட் சலுகை நீட்டிக்கப்படாது. டிசம்பர் 1 முதல், வட்டி, அபராதத்துடன் வசூலிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

