விளையாட்டு துறையையும் கவனிக்கலாமே என தோன்றுகிறது: முதல்வர் பேச்சு
விளையாட்டு துறையையும் கவனிக்கலாமே என தோன்றுகிறது: முதல்வர் பேச்சு
UPDATED : அக் 14, 2025 06:48 PM
ADDED : அக் 14, 2025 06:44 PM

சென்னை: '' துணை முதல்வர் உதயநிதியின் சிறப்பான பணியை பார்க்கும்போது, விளையாட்டு துறையையும் நானே கவனிக்கலாமே என எனக்கு தோன்றுகிறது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: விளையாட்டு துறையில் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. தேசிய தொடராக, சர்வதேச தொடராக இருந்தாலும் உயர் தரத்துடன் நடத்தும் இடமாக தமிழகம் வளர்ந்துள்ளது. நமது தமிழக வீரர்கள் ஒவ்வொருவரும், வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கின்றனர். இதற்காக பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
விளையாட்டை வளர்க்க, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க உரிய அங்கீகாரம் வழங்க 37 கோடி ரூபாய் பரிசுத்தொகையோடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தி உள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் எப்படிப்பட்ட உயரம் அடைகிறது என இளைஞர்களுக்கு தெரியும். பொருளாதாரத்தில் எந்த மாநிலமும் சாதிக்காத இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளோம்.இந்த சாதனை விளையாட்டு துறையில் எதிரொலிக்கிறது. அது இன்னும் எதிரொலிக்கும்.
திறமையாளர்கள் எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறோம்.அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் கோப்பை தொடரை உருவாக்கினோம். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளோம்.
தமிழகம் போன்று வேறு எந்த மாநிலமும் விளையாட்டு துறைக்கும், வீரர்களுக்கும் உதவிகள் செய்தது இல்லை. எத்தனை விருதுகள் தமிழகத்தைத் தேடி வந்தாலும், விளையாட்டை வாழ்க்கையாகத் தேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்கும் இத்தனை ஆயிரம் மாணவர்களின் நம்பிக்கை தான் பெரிய விருது. எளியவர்களின் வெற்றி தான் நமது அரசின் வெற்றி.பல திட்டங்கள் மூலம் ஏழை வீரர்களின் கனவை அரசு நிறைவேற்றுகிறது. அவர்களும் சாதனை செய்து நமது பெருமையை காப்பாற்றுகின்றனர். நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்த போது ஏராளமான பணிகளை செய்ததை பார்த்த முதல்வராக இருந்த கருணாநிதி விழா ஒன்றில் பேசும் போது, எனது துறையில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு பேசி, நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கலாமோ என தோன்றுகிறது' என்றார்.
இன்று அதே ஏக்கம் எனக்கு வந்துள்ளது. நானே விளையாட்டு துறையையும் கவனித்து கொள்ளலாமே என எனக்கு தோன்றுகிறது. காரணம், உதயநிதியின் பணி அவ்வாறு உள்ளது. அவரின் பணி இன்னும் சிறக்க வேண்டும். தமிழக வீரர்கள் இன்னும் வெற்றிகளை குவிக்க வேண்டும். மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவோம் உங்களின் திறமையால் தமிழகம், இந்தியாவுக்கு பெருமை தேடி தாருங்கள் வாய்ப்புகளை நிறைவேற்றி தர முதல்வராக நானும், அமைச்சராக உதயநிதியும் இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.