ADDED : ஜன 02, 2025 06:22 AM
பெங்களூரு: மாநிலத்தில் உள்ள முக்கிய பஸ் நிலையங்கிளில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், ஆடியோ அறிவிப்பு வெளியிடுமாறு, அரசுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில், மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் என லட்சக்கணக்கானோர் தினமும் பஸ்களில் பயணம் செய்கின்றனர். எனவே பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.
பஸ்களில் பயணம் செய்யக்கூடிய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், எந்த பஸ் வருகிறது என்பது தெரியாததால் பஸ்களை தவறவிடுகின்றனர். இதனால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு, சரியான நேரத்திற்கு போக முடியாத சூழல் உருவாகிறது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிலர் உதவினாலும், மக்கள் கூட்டம் இல்லாத இடங்களில் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து கிருத்திகா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அரவிந்த், அன்ஜாரியா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷ்ரேயாஸ், மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை விளக்கினார்.
இதை கேட்ட நீதிபதிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, மாநிலத்தில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் 'ஸ்பீக்கர்' வைக்க அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிட்டனர்.
இந்த ஸ்பீக்கர்களில் பஸ்கள் வந்து போகும் நேரம், பஸ் நம்பர், போகும் இடம் ஆகியவை குறித்து அறிவிக்க வேண்டும். இதனால் மாற்றுத்திறனாளிகள் உட்பட பொதுமக்களும் சிரமம் இன்றி பயணம் செய்ய முடியும்.
இதற்கான தொழில்நுட்ப உபகரணங்கள், செயல்முறைகள் குறித்து அரசு, போக்குவரத்துக் கழகங்களுடன் பேச்சு நடத்தி, திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திட்டத்திற்கான நிதியை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஒவ்வொரு மாவட்டம், தாலுகாவில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் வரும் பஸ் நிலையங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக மேற்பார்வை குழு ஒன்றை அமைக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

