மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
ADDED : பிப் 10, 2025 11:55 PM

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி பயிற்சி டாக்டர் பாலியல் கொலை சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கோல்கட்டாவில் நள்ளிரவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:
கோல்கட்டா நியு டவுன் பகுதியை சேர்ந்த மாணவி, சரியாக படிக்கவில்லை என தன் தாயார் திட்டியதால், இரவு 10:00 மணிக்கு மேல் கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு சென்றார்.
வீடு திரும்ப முடியாமல் நள்ளிரவில் பரிதவித்தபோது, அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ டிரைவரிடம், தன்னிடம் பணம் இல்லை என்றும், வீட்டில் விடும்படியும் கூறினார்.
மாணவியை ஆட்டோவில் ஏற்றிய டிரைவர் சவுமித்ரா ராய், மற்ற பயணியரை இறக்கி விட்ட பின், மாணவியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்; பின், மாணவியை கழுத்தை நெரித்துக் கொன்றார்.
இதற்கிடையே, தன் மகள் காணாமல் போன தகவல் அறிந்த அவரது தாயார், புகார் அளித்த நிலையில், கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, கடைசியாக மாணவியை அழைத்துச் சென்ற சவுமித்ராவை பிடித்து விசாரித்தோம்.
இதில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின்படி, கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன், வீட்டில் இருந்து 6 கி.மீ., தொலைவில் ஆள் அரவமற்ற கட்டட வளாகத்தில் மாணவி உடலை மீட்டோம்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைதான சவுமித்ரா மீது ஏற்கனவே பாலியல் வழக்குகள் உள்ளன. எட்டு மாதம் சிறையிலும் இருந்திருக்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.