தானியங்கி கருவி எச்சரிக்கை; விபத்தில் இருந்து தப்பிய ரயில்
தானியங்கி கருவி எச்சரிக்கை; விபத்தில் இருந்து தப்பிய ரயில்
ADDED : ஆக 12, 2024 04:06 AM

புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் மிர்சாபுரில், தண்டவாளத்தில் உள்ள தானியங்கி கருவி முன்கூட்டியே எச்சரித்ததால், மிகப்பெரிய விபத்தில் இருந்து பயணியர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது.
பீஹாரின் ஜோக்பானியில் இருந்து, டில்லி நோக்கி சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. உத்தர பிரதேசத்தின் மிர்சாபுர் அருகே உள்ள சுனார் ரயில் நிலையத்தை காலை 10:00 மணிக்கு கடந்தது.
அப்போது, ரயிலின் எஸ் - 3 பெட்டியின் சக்கரங்களில் அளவுக்கு அதிகமான வெப்பம் இருப்பதை தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ள, 'ஹாட் ஆக்சல் பாக்ஸ்' கருவி கண்டறிந்து அருகில் உள்ள ஸ்டேஷனுக்கு எச்சரிக்கை அனுப்பியது.
இதைத் தொடர்ந்து அடுத்து வந்த ஜக்னா ரயில் நிலையத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து எஸ் - 3 பெட்டி தனியாக பிரிக்கப்பட்டது. அதில் இருந்த பயணியர், வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.
அதன் பின் பிரயாக்ராஜ் ரயில் நிலையம் வந்தடைந்ததும், புதிய பெட்டி இணைக்கப்பட்டு, எஸ் - 3 பெட்டியில் பயணித்த பயணியர் அதில் பயணத்தை தொடர்ந்தனர். இதனால், அந்த ரயில் ஐந்து மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
ரயில் பெட்டிகளின் பால் பேரிங்கில் கோளாறோ அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், பெட்டியின் ஆக்சல் சூடு அதிகரிக்கும். அவ்வாறு சூடு அதிகரிக்கும்போது, ரயில் சக்கரத்தில் அந்த சூடு பிரதிபலிக்கும். இது போன்ற நேரங்களில் ரயில் சக்கரம் திடீரென நின்று விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்த ஆக்சல் சூட்டை கண்டறிய, 'ஹாட் ஆக்சல் பாக்ஸ்' என்ற தானியங்கி கருவிகள் தண்டவாளத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. ரயில் இவற்றை கடக்கும் போது, சக்கரத்தில் வெளிப்படும் சூட்டின் அளவை கணக்கிட்டு, ஆபத்தை முன்கூட்டியே எச்சரித்து வருகிறது.