முதியோர், சிறுவர்கள் பெருவழி புல்மேடு பாதைகளை தவிர்க்கவும்
முதியோர், சிறுவர்கள் பெருவழி புல்மேடு பாதைகளை தவிர்க்கவும்
ADDED : டிச 09, 2025 03:39 AM

சபரிமலை: வயது முதியவர்களும் சிறுவர் சிறுமியரும் பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு பாதையில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை எதிர்கொள்வது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நடந்தது.
கூட்டத்திற்குப்பின் ஆர்.டி.ஓ. அருண் எஸ்.நாயர் கூறியதாவது:
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், நடப்பதற்கு சிரமப்படுபவர்கள், முதியவர்கள், சிறுவர் சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும். நிலக்கல் - பம்பை வழியாக வர வேண்டும். பெருவழிப் பாதை, புல் மேடு பாதையில் மீட்பு, மருத்துவ வசதி செய்வதில் சிரமங்கள் உள்ளன. பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பாதைகளில் சிக்குபவர்களை மீட்டுக் கொண்டு வர வனப் பாதுகாவலர்கள், தீயணைப்பு வீரர்கள், மத்திய அதிரடிப்படை வீரர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது கூட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
மண்டல பூஜை நெருங்கும்போது ஏற்படும் கூட்டத்தை எதிர்கொள்ள செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. டிராக்டர் வரும் பாதைகளில் பக்தர்கள் பாய் விரித்து தங்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

