ADDED : பிப் 16, 2024 07:03 AM
கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடையே உட்கட்சி பூசல் இருப்பது ஒன்றும் புதிய தகவல் இல்லை. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதை பலரும் அறிவர்.
உணவுத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பாவால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், நசீர் அகமது, சையத் ஜமீர் பாஷா, கொத்துார் மஞ்சுநாத், அனில் குமார் எம்.எல்.சி., நாகராஜ், தங்கவயல் சீனிவாஸ், சங்கர், சுதாகர், வி.முனியப்பா என பெரிய பட்டியலே உண்டு.
இந்த பாதிக்கப்பட்ட 'டீம்' கடந்த லோக்சபா தேர்தலில் ஒருங்கிணைந்து முனியப்பாவை முதன் முறையாக தோற்கடித்தனர். இதற்கு பதிலடியாக, 2023ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், முனியப்பா ஆதரவாளர்கள், சீனிவாசப்பூர் தொகுதியில் ம.ஜ.த.,வின் வெங்கட் ஷிவா ரெட்டி வெற்றிக்கு பாடுபட்டு, காங்கிரசின் ரமேஷ் குமாரை தோற்கடித்தனர்.
மோதல் தொடர்கிறது
கோலார் மாவட்ட காங்கிரசில் கோஷ்டி வியாதியை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையே அக்கட்சியினருக்கு இல்லை. கோஷ்டி மோதல் தொடர்கிறது.
'கடந்த திங்கட்கிழமையன்று நடந்த கோலார் பூத் கமிட்டி கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் கோலார் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், ரமேஷ் குமார், நசீர் அகமது படங்கள் இடம் பெறாததால் தகராறு ஏற்பட்டது' என்று மாவட்ட காங்கிரஸ் தலைவர் லட்சுமி நாராயணா கூறியிருந்தார்.
ஆனால், உண்மையை அவர் மறைப்பதாக கோலார் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
'சீனிவாசப்பூர் தொகுதியில் காங்கிரசின் ரமேஷ் குமாரை தோற்கடிக்க காரணமாக இருந்தவர்களை மேடையில் ஏன் அமர வைக்க வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வெளிப்படையாக கேள்வி கேட்டேன். துரோகிகளை மேடையில் இருந்து இறக்க வேண்டும் என்று இழுத்ததில் என்ன தவறு.
உண்மை நிலவரம்
'எதிரிகளை ஏற்றுக் கொள்ளலாம்; துரோகிகளை எப்படி ஏற்க முடியும். அவர்களுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். கட்சியின் துரோகிகளுக்கு துணை போகக் கூடாது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மேலிடத்துக்கு உண்மை நிலவரத்தை எடுத்து சொல்ல வேண்டும்.
'கோலார் லோக்சபா தொகுதியை காங்கிரசின் கோட்டை என்பதை நிரூபிக்க உண்மையான, நேர்மையான காங்கிரஸ்காரர் ஒருவருக்கு சீட் வழங்க வேண்டுமே தவிர, விஷமிகளுக்கு சீட் வழங்க வேண்டாம்' என்று, கண்டிப்புடன் கூறி உள்ளார்.
கோலார் லோக்சபா தொகுதி, கோஷ்டி பூசலால் மீண்டும் ரணகளமாகி வருகிறது. -கோலாரில் காங்கிரஸ் தரப்பில் இரு முறை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் வெற்றி நிச்சயம் என கூறப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பை பொய்யாக்கும் வகையில், வெற்றி வாய்ப்பை தகர்க்கும் முயற்சயில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
- நமது நிருபர்