300 ஆண்டு வழக்கத்தை மாற்றினார் அயோத்தி ஹனுமன் கோவில் பீடாதிபதி
300 ஆண்டு வழக்கத்தை மாற்றினார் அயோத்தி ஹனுமன் கோவில் பீடாதிபதி
ADDED : மே 01, 2025 01:04 AM

அயோத்தி: உத்தர பிரதேசத்தில் உள்ள ஹனுமன் கோவிலின் தலைமை பீடாதிபதி, 300 ஆண்டு வழக்கத்தை மாற்றி, அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்று நேற்று வழிபட்டார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்ட ராமர் கோவிலுக்கு கடந்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்தது. ராமர் கோவிலை ஒட்டி ஹனுமன் கோவில் உள்ளது. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் இக்கோவிலில் வழிபட்ட பின் தான் அங்கு செல்வர்.
இதற்கிடையே, ஹனுமன் கோவிலின் தலைமை பீடாதிபதியாக உள்ள மஹந்த் பிரேம் தாஸ் நேற்று அயோத்தி ராமர் கோவிலில் வழிபட்டார். ஹனுமன் கோவில் பீடாதிபதியாக பொறுப்பேற்பவர், சமாதி அடையும் வரை அக்கோவிலை விட்டு வெளியேறாமல் கடவுளுக்கு சேவை செய்வது வழக்கம்.
கடந்த 288 ஆண்டுகளில், ஹனுமன் கோவிலை விட்டு பீடாதிபதி வெளியே வந்தது இதுவே முதல்முறை. வரலாற்று சிறப்புமிக்க இத்தருணத்தை வரவேற்கும் வகையில், யானைகள், குதிரைகள் புடைசூழ பீடாதிபதி மஹந்த் பிரேம் தாஸை, சாரட் வண்டியில் அயோத்தி ராமர் கோவிலுக்கு அவரது சீடர்கள் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக சரயு நதிக்கரையில் புனித நீராடிய பின் பீடாதிபதி மஹந்த் பிரேம் தாஸ், ராமர் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார். தங்கள் வாழ்வில் ஒரு முறைதான் இத்தகைய அரிய நிகழ்வைக் காண முடியும் என அவரது சீடர்கள் சிலாகிக்கின்றனர்.