அயோத்தி கோவில் பாதையில் அலங்கார விளக்குகள் மாயம்: உ.பி., போலீசுக்கு வந்தது தலைவலி
அயோத்தி கோவில் பாதையில் அலங்கார விளக்குகள் மாயம்: உ.பி., போலீசுக்கு வந்தது தலைவலி
UPDATED : ஆக 14, 2024 09:52 AM
ADDED : ஆக 14, 2024 09:33 AM

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. கடந்த மே 9ம் தேதிக்கு பிறகு அந்த பாதைகளில் விளக்குகள் காணாமல் போனதாக விசாரணையில் தெரியவந்தாலும், ஆக.,9ல் தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் கோவிலை கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்கின்றனர். இந்த நிலையில் அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
மே 9ம் தேதியே மிஸ்ஸிங்
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் ராம பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரொஜெக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன. கடந்த மே 9ம் தேதி அந்தப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டபோது சில விளக்குகள் மாயமானது தெரியவந்தது. இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 பிரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இருந்தும், இது தொடர்பாக போலீசார் ஆகஸ்ட் 9ம் தேதி தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருட்டு சம்பவம் தொடர்பாக விளக்குகளை நிறுவிய நிறுவனத்தின் பிரதிநிதி, ராமஜென்மபூமி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. இந்த விவகாரம், அயோத்தி போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
எந்நேரமும் நுாற்றுக்கணக்கான போலீசார் காவல் இருந்தும் எப்படி விளக்குகள் திருடு போயின என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.