ADDED : ஜன 24, 2024 06:04 AM
பெங்களூரு : அயோத்தி ராமர் கோவிலை தரிசிக்க செல்லும் பக்தர்களின் வசதிக்காக, கர்நாடகாவின் பல்வேறு நகரங்களில் இருந்து, ஒரு மாதம் வரை சிறப்பு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக, தென்மேற்கு ரயில்வேத்துறை வெளியிட்ட அறிக்கை:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த பின், ராமரை தரிசிக்க செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவர்களின் வசதிக்காக பெங்களூரு, மைசூரு, துமகூரு, சித்ரதுர்கா, பெலகாவியில் இருந்து ஜனவரி 31 லிருந்து ஒரு மாதம் சிறப்பு ரயில்கள் இயங்கும்.
பெங்களூரின் விஸ்வேஸ்வரய்யா டர்மினலில் இருந்து ஜனவரி 31, பிப்ரவரி 14, பிப்ரவரி 28ல் அயோத்திக்கு ரயில் புறப்படும். அரசிகெரே, கதக், விஜயபுரா வழியாக செல்லும். அயோத்தியில் இருந்து, விஸ்வேஸ்வரய்யா டர்மினலுக்கு, பிப்ரவரி 3, 17, மார்ச் 2ல் புறப்படும்.
மைசூரு - அயோத்தி இடையிலான சிறப்பு ரயில், பிப்ரவரி 4, 18ல், மைசூரில் இருந்து புறப்படும். பெங்களூரு, அரசிகெரே, ஹொஸ்பேட் வழியாக அயோத்தியை அடையும். இங்கிருந்து பிப்ரவரி 7 மற்றும் 21ல் மைசூருக்கு புறப்படும்.
மைசூரு - அயோத்தி இடையே, மற்றொரு சிறப்பு ரயில் பிப்ரவரி 17ல், மைசூரில் இருந்து புறப்படும். பிப்ரவரி 20ல் அயோத்தியில் இருந்து, மைசூருக்கு புறப்படும்.
துமகூரு - அயோத்தி இடையிலான, சிறப்பு ரயில் பிப்ரவரி 7 மற்றும் 21ல், துமகூரில் இருந்து புறப்படும். பிப்ரவரி 10, 24ல் அயோத்தியில் இருந்து துமகூருக்கு புறப்படும்.
சித்ரதுர்கா - அயோத்தி சிறப்பு ரயில், பிப்ரவரி 11 மற்றும் 2ல், சித்ரதுர்காவில் இருந்து புறப்படும். பிப்ரவரி 14, 28ல் அயோத்தியில் இருந்து, சித்ரதுர்காவுக்கு புறப்படும்.
பெலகாவி - அயோத்தி சிறப்பு ரயில், பிப்ரவரி 17ல் பெலகாவியில் இருந்து புறப்படும். பிப்ரவரி 20ல், அயோத்தியில் இருந்து, சித்ரதுர்காவுக்கு திரும்பும். இந்த ரயில் ஹுப்பள்ளி, பல்லாரி, ராய்ச்சூர் வழியாக செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

