ADDED : டிச 13, 2024 02:37 AM
சபரிமலை,:சபரிமலை வரும் பக்தர்களுக்கு உதவ, வனத்துறை சார்பில், 'அய்யன்' என்ற மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செயலியில் பம்பை - சன்னிதானம், சுவாமி அய்யப்பன் சாலை, பம்பா - நீலிமலை - சன்னிதானம், எருமேலி, அழுதை கடவு - பம்பை, சத்திரம் - உப்பு பாறை - புல்மேடு - சன்னிதானம் ஆகிய பாதைகளில் பக்தர்களுக்கு கிடைக்கும் சேவைகள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு பாதைகளில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ அவசர உதவி மையங்கள், தங்கும் வசதி, யானை தடுப்பு படை, கழிப்பறைகள், ஒவ்வொரு இடத்திலிருந்தும் அடுத்த தங்குமிடத்துக்கான துாரம், தீயணைப்பு, போலீஸ் உதவி மையம், எக்கோ கடைகள், குடிநீர் வினியோக மையங்கள் உள்ளிட்ட பல விபரங்கள் உள்ளன.
பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொது விஷயங்கள், பெரியாறு வனவிலங்கு சரணாலயத்தின் முக்கியத்துவம், சபரிமலை கோவில் தொடர்பான விபரங்கள், அவசர தொலைபேசி எண்களும் உள்ளன. பெரியாறு புலிகள் சரணாலய மேற்கு மண்டல அலுவலகம் சார்பில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
பிளே ஸ்டோரில் இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என, ஐந்து மொழிகளில் விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே, பக்தர்கள் அதிகமாக கேட்பதால், சபரிமலை அய்யப்பனின் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை செய்ய முடிவு செய்துள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு, அதற்காக டெண்டர் கோரியுள்ளது. 1 கிராம், 2 கிராம், 4 கிராம், 6 கிராம், 8 கிராம் என, ஐந்து வகை டாலர்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

