ADDED : டிச 31, 2024 05:24 AM
பெலகாவி: டாக்டர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த எட்டரை மாத சிசு உயிரிழந்தது.
பெலகாவி, கோகாக்கின் மெல்மட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா கட்டஹோளி, 23. இவர் எட்டரை மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை உடனடியாக, எம்கன்மரடியின் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பெலகாவியின் பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையை சென்றடைவதற்குள், கர்ப்பிணியின் உடல் நிலை மோசமானது. உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமானால், முதலில் பணம் கட்டுங்கள் என, மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். ஆனால், அவரது குடும்பத்தினரால் பணம் கட்ட முடியவில்லை.
எனவே நள்ளிரவு 12:00 மணியளவில், கர்ப்பிணியை பெலகாவியின் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மருத்துவமனை, மருத்துவமனையாக அலைந்தும் சிகிச்சை அளிக்கப்படாததால், குழந்தை கர்ப்பத்திலேயே உயிரிழந்தது. டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, ராதிகாவின் வயிற்றில் இருந்து, இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.
'தனியார் மருத்துவமனையில், உடனடியாக சிகிச்சை அளித்திருந்தால், குழந்தையை காப்பாற்றி இருக்கலாம். குழந்தை இறந்ததற்கு, மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்களே காரணம்' என, குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.