ADDED : பிப் 07, 2024 02:23 AM

புதுடில்லி, லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான பிரிவே, உண்மையான தேசியவாத காங்கிரஸ் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது; இது கட்சி நிறுவனர்களில் ஒருவரான சரத் பவாருக்கு பெருத்த பின்னடைவாகும். மேலும், இண்டியா கூட்டணிக்கு விழுந்துள்ள மற்றொரு அடியாகும்.
மஹாராஷ்டிராவில் மிகவும் வலுவான கட்சிகளில் ஒன்றாக தேசியவாத காங்கிரஸ் திகழ்ந்தது. ஒரு கட்டத்தில், தேசிய கட்சியாக இருந்த அது, தற்போது மாநில கட்சியாக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த சரத் பவார், பி.ஏ.சங்மா உள்ளிட்டோர் இணைந்து, 1999ல் இந்த கட்சியை உருவாக்கினர். மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் சரத் பவார் முக்கியமான தலைவராக விளங்கி வந்தார்.
புதிய பெயர்
கடந்தாண்டு ஜூலையில், சரத் பவாரின் சகோதரரின் மகனான மூத்த தலைவர் அஜித் பவார், திடீர் போர்க்கொடி துாக்கினார். பல எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுடன் அவர் தனியாக பிரிந்தார்.
மேலும், பா.ஜ., -மற்றும் சிவசேனா கூட்டணி அரசில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர் துணை முதல்வராகவும், அவருடைய ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் கேட்டு, தேர்தல் கமிஷனில் அவர் மனு கொடுத்தார். அதுபோல, சரத் பவார் தலைமையிலான பிரிவும் மனு கொடுத்தது.
இதை விசாரித்த தேர்தல் கமிஷன், சட்டசபை மற்றும் கட்சியில் பெரும்பான்மையினர் ஆதரவு உள்ளதால், அஜித் பவார் தலைமையிலான அணியை, தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது.
கட்சியின் பெயர், கொடி, மற்றும் அலாரம் கடிகாரம் சின்னம் ஆகியவற்றை, அஜித் பவாருக்கு ஒதுக்கியுள்ளதாக நேற்று அறிவித்தது.
விரைவில் ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளதால், சரத் பவார் தலைமையிலான அணி, புதிய பெயர் மற்றும் சின்னம் கேட்டு, மூன்று பெயர்களுடன் பரிந்துரையை இன்று அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, மாநிலத்தில் மற்றொரு முக்கிய கட்சியான சிவசேனா இரண்டாகப் பிரிந்தது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு கட்சியின் பெயர், சின்னம் கிடைத்தது. இதனால், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பிரிவுக்கு வேறு பெயர், சின்னம் ஒதுக்கப்பட்டது.
லோக்சபா தொகுதிகள்
தற்போது உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார், தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின், இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். மஹாராஷ்டிராவில், 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
இருவரும் தங்களுடைய கட்சிப் பெயர், சின்னத்தை இழந்துள்ளனர். இது இண்டியா கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கும் என, கூறப்படுகிறது.
கடந்த, 25 ஆண்டுகளாக தன் கட்டுப்பாட்டில் இருந்த கட்சி, கைவிட்டு போனது, சரத் பவாருக்கு தனிப்பட்ட முறையில் பெரிய பின்னடைவாகும்.

