உ.பி., போலீசை கைது செய்ய வந்த டில்லி போலீசாருக்கு 'காப்பு'
உ.பி., போலீசை கைது செய்ய வந்த டில்லி போலீசாருக்கு 'காப்பு'
UPDATED : பிப் 20, 2025 02:25 AM
ADDED : பிப் 20, 2025 02:23 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பணிபுரியும் இரண்டு போலீசாரை, முறையான அறிவிப்பு மற்றும் முன் அனுமதியின்றி வழக்கு ஒன்றில் கைது செய்ய வந்த டில்லி போலீசாரை உ.பி., போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
டில்லியைச் சேர்ந்தவர் அன்கித் ஜெயின். இவரது சகோதரி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் உ.பி., போலீசில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் சச்சின் மற்றும் விஸ்வஜீத் ஆகியோர் பங்குதாரர்களாக செயல்பட்டனர்.
இவர்கள் அந்நிறுவனத்தின், 1.5 கோடி ரூபாயை மோசடி செய்ததாக சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து, இந்த மோசடியில் ஈடுபட்ட உ.பி., போலீசார் சச்சின் மற்றும் விஸ்வஜீத் மீது டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் கைது செய்ய நேற்று முன்தினம் தனியார் காரில் டில்லி போலீசார் துப்பாக்கிகளுடன் உ.பி.,யின் லலித்பூருக்கு வந்தனர்.
போலீஸ் குடியிருப்பில் இருந்த கான்ஸ்டபிள் இருவர் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை டில்லி போலீசார் கைது செய்தனர். இது குறித்து உ.பி., போலீசாருக்கு அவர்கள் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பதிலுக்கு உ.பி., போலீசார் டில்லி போலீசாரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.
அங்கு நாள் முழுதும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின் டில்லி போலீசார் மன்னிப்பு கேட்ட பிறகே விடுவிக்கப்பட்டனர். முறையான ஆவணங்களுடன் வந்து விசாரணையை தொடரும்படி, உ.பி., போலீசார் கேட்டுக்கொண்டனர்.