துள்ளாத மனமும் துள்ளும் சாகச பிரியர்களின் சொர்க்கம் பாதாமி
துள்ளாத மனமும் துள்ளும் சாகச பிரியர்களின் சொர்க்கம் பாதாமி
ADDED : டிச 05, 2024 07:37 AM

இளம் தலைமுறையினருக்கு, ஏதாவது ஒரு சாகசத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருக்கும். சாகசத்தில் ஈடுபட்டு மற்றவர்களை மகிழ்விக்க எந்த முயற்சி வேண்டுமென்றாலும் எடுப்பர். சாகச பிரியர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது பாதாமி. அங்கு என்ன சாகசம் மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
பாகல்கோட் மாவட்டத்தின் பாதாமியில் பாதாமி மலை உள்ளது. இங்கு உள்ள மணற்கல் பாறைகளில் ஏறுவதற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இங்கு சுற்றுலா வரும் சாகச பிரியர்கள் பாறை ஏறுவதற்கு ஆசைப்படுகின்றனர். இதனால் இப்பகுதி, 'பாறை ஏறுதலின் மெக்கா' என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாறையில் ஏறுவதற்கு 5பி முதல் 8பி வரை கிரேடிங் என்று உள்ளது. இலவசமாக ஏறுதல், போல்டரிங், ராப்லிங்க் என்று பாறை ஏறுவதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு ஏற, இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை ஆகலாம்.
உடலில் கயிறு கட்டி மேலே ஏறி செல்ல வேண்டும். ஏற்கனவே ஏறிய அனுபவம் உள்ளவர்கள் வேகமாக சென்று விடுகின்றனர். புதிதாக செல்வோர், மெதுவாக ஏறுகின்றனர். பாறை ஏறுதல் நிபுணர்கள் மேற்பார்வையுடன் மட்டுமே அங்கு ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. தனியாக பாறை ஏற அனுமதி இல்லை.
கீழிருந்து பார்க்கும்போது ஒரே பாறையாக தான் இருக்கும். ஆனால் மேலே ஏறி செல்லும் போது நிறைய பாறைகளை பார்க்கலாம். வானிலையை பொறுத்து, பாறை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு செல்ல உகந்த நேரமாக கருதப்படுகிறது.
இந்த மலையை சுற்றி 20 முதல் 35 கி.மீ., துாரத்தில் பட்டடக்கல், பனசங்கரி, ஐஹோல் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன. பெங்களூரில் இருந்து பாதாமி 450 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பாதாமிக்கு நேரடி அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. - நமது நிருபர் - -