ADDED : பிப் 26, 2024 03:45 AM

புதுடில்லி : பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உத்தர பிரதேச எம்.பி., ரிதேஷ் பாண்டே, நேற்று அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., ஆக இருப்பவர் ரிதேஷ் பாண்டே. இவர் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகுவதாக, அதன் தலைவர் மாயாவதிக்கு கடிதம் எழுதினார்.
அதில், 'நீண்ட காலமாக கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் எதற்கும் என்னை அழைப்பதில்லை. உங்களை சந்திக்க முயன்றும் முடியவில்லை. இதனால் கட்சிக்கு என் சேவை தேவையில்லை என்பதை உணர்ந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து விலகுகிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.
கட்சியில் இருந்து விலகிய சில மணி நேரங்களில், உத்தர பிரதேச பா.ஜ., பொறுப்பாளர் வைஜெயந்த் ஜெய் பாண்டா, பா.ஜ., மாநில தலைவர் பூபேந்தர் சிங் ஆகியோர் முன்னிலையில், பா.ஜ.,வில் அவர் சேர்ந்தார். அவருக்கு உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் வாழ்த்து தெரிவித்தார்.
அருணாச்சலில் அதிரடி
இதே போல் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டும் ஒன்றாக நடக்க உள்ள அருணாச்சல பிரதேசத்தில், காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆளும் பா.ஜ.,வில் இணைந்தனர். இங்கு முதல்வர் பெமா காண்டு தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
அருணாச்சல் சட்டசபையில் மொத்தம், 60 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது மாற்று கட்சிகளில் இருந்து நான்கு எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு தாவியதை அடுத்து, அந்த கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 53 ஆக அதிகரித்துள்ளது. மூன்று சுயேச்சைகள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளனர். காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சிக்கு தலா இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

