ADDED : மார் 22, 2024 09:31 PM

புதுடில்லி :டில்லி மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய, சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கு குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, ஆம் ஆத்மியைச் சேர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, எம்.பி., சஞ்சய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறி, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், எம்.எல்.சி.,யுமான கவிதாவை, கடந்த வாரம், ஹைதராபாதில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தற்போது, அமலாக்கத் துறை காவலில் உள்ளார்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி, கவிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ஜாமின் பெற விசாரணை நீதிமன்றத்தை நாடும்படி, கவிதாவுக்கு அறிவுறுத்தினர். மேலும், 'அது தான் வழக்கமான நடைமுறை. அதை உச்ச நீதிமன்றத்தால் மீற முடியாது' என, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அதே நேரம், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

