அரசு அதிகாரி பலியான விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு ஜாமின்
அரசு அதிகாரி பலியான விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு ஜாமின்
ADDED : செப் 28, 2025 03:56 AM
புதுடில்லி:நிதி அமைச்சக மூத்த அதிகாரி உயிரிழந்த விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு புதுடில்லி பாட்டியாலா நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
புதுடில்லி ஹரி நகரில் வசித்தவர் நவ்ஜோதி சிங்,52. மத்திய நிதியமைச்சகத்தில் பொருளாதார விவகாரப் பிரிவு துணைச் செயலராக பதவி வகித்தார். கடந்த 14ம் தேதி டில்லி கன்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரிங் ரோட்டில் மனைவியுடன் பைக்கில் சென்றார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ., சொகுசு கார், பைக் மீது மோதியது. நவ்ஜோத் சிங் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த சிங், அதே இடத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காரை ஓட்டி வந்த ககன்ப்ரீத் கவுர், 38, கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ககன் பிரீத் கவுர் சார்பில், பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அங்கித் கார்க், ஒரு லட்சம் ரூபாய்க்கான பத்திரம், அதே தொகைக்கு இரண்டு பேர் பத்திரங்கள் தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டார். மேலும், ககன் பிரீத் கவுர் தன் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.