ADDED : நவ 14, 2024 09:29 PM
இந்தியா கேட்:வக்பு வாரிய பணமோசடி வழக்கில் குற்றஞ்சாட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமனதுல்லா கான் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி வக்பு வாரியத்தின் தலைவராக 2018 முதல் 2022 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,வான அமனதுல்லா கான் இருந்தார். அந்த காலகட்டத்தில் சட்டவிரோதமாக பணியாளர்களை சேர்த்தது, வக்பு வாரியத்துக்குச் சொந்தமான அசையா சொத்துக்களை குத்தகைக்கு அளித்ததில் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமனதுல்லா கான், அவரது கூட்டாளிகளான ஜீஷன் ஹைதர், தாவுத் நசீர், ஜாவேத் இமாம் சித்திக் உள்ளிட்ட ஐந்து பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அமனதுல்லா கானுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, கடந்த ஆண்டு நவம்பரில் அவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்தது.
அப்போது முதல் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில் அவர்கள் சார்பில் ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுவதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். இதை ஏற்று, நேற்று முன்தினம் அவர்களுக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.