போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது பலுாச் விடுதலைப் படை அமைப்பு
போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது பலுாச் விடுதலைப் படை அமைப்பு
ADDED : ஆக 17, 2026 09:03 PM
குவெட்டா: பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தன் ஆயுதப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக பலுாசிஸ்தான் விடுதலைப் படை அறிவித்துள்ளது; மேலும், கடந்த எட்டு நாட்களில் பலுாசிஸ்தான் முழுதும் நடந்த 22 தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதுடன், அத்தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களில் மிகப் பெரியது பலுாசிஸ்தான். தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கப்படுவதாக இந்த மாகாண மக்கள், பாக்., அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களை நடத்தும் பி.எல்.ஏ., எனப்படும் பலுாசிஸ்தான் விடுதலைப் படை, பலுாசிஸ்தானை தனி நாடாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் பலுாசிஸ்தானின் சூராப் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்திய வான்வழி தாக்குதல்கள் மற்றும் தேடுதல் வேட்டையின் போது பொதுமக்கள் மற்றும் பி.எல்.ஏ., அமைப்பைச் சேர்ந்த, 21 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்கள் ஆயுதப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக பி.எல்.ஏ., அறித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த எட்டு நாட்களில் பலுாசிஸ்தான் முழுதும், 22 தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில், 26 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பி.எல்.ஏ., கூறியுள்ளது.
