ஜவஹர்லால் நேரு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடத்த தடை
ஜவஹர்லால் நேரு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடத்த தடை
ADDED : மார் 19, 2024 10:27 PM

புதுடில்லி:டில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு விதிமுறைப்படி புதுப்பிக்கப்படும் வரை, மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த டில்லி தீயணைப்புத் துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி தீயணைப்புத் துறை இயக்குனர் அதுல் கர்க் கூறியதாவது:
ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கடந்த 13ம் தேதி காலை 7:30 மணிக்கு கண்காணிப்புக் கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
பி -1 சுரங்கப்பாதை அருகேயுள்ள பிரதான அரங்கின் கீழ் அடித்தளத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் அந்த அறையில் இருந்தவர்மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீயணைப்புத் துறையும் விசாரணை நடத்தியதில், மைதானத்தின் தீ பாதுகாப்பு சான்றிதழ் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, பாதுகாப்பு விதிமுறையின்படி மைதானத்தை புதுப்பிக்கும் வரை, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
680 விலங்குகள் மீட்பு
ஜனவரி 1 முதல் மார்ச் 13 வரை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பொதுமக்களிடன் இருந்து 5,600 பேர் போனி எங்களை அழைத்து, பறவை மற்றும் விலங்குகள் மாட்டிக் கொண்டு தவிப்பது குறித்து தகவல் அளித்துள்ளனர். ஜனவரியில் 2,502 அழைப்புகளும், பிப்ரவரியில் 2,150, மார்ச் 13 வரை 947 அழைப்புகளும் வந்துள்ளன.
அதன்படி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நாய், மாடுஉள்ளிட்ட 680 விலங்குகள் மற்றும் 565 பறவைகளை மீட்டுள்ளனர். சிக்கித் தவிக்கும் சில விலங்குகள், மன அழுத்தத்துக்கு உள்ளாகி விடுகின்றன. சில நேரத்தில், காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்களைத் தாக்கி காயப்படுத்தியுள்ளன.
விலங்குகளை மீட்பது சற்று சவாலான வேலைதான். கடந்த ஆண்டு, தீயணைப்புப் படை வீரர் வேத பிரகாஷ், கால்வாயில் சிக்கித் தவித்த நாயை காப்பாற்றச் சென்றார்.
ஆனால், அந்த நாய், அவரது முகத்தில் 19 இடங்களில் கடித்துக் குதறியது. இருப்பினும் லாவகமாக அதை மீட்டார். அவருக்கு முகத்தில் 19 இடங்களில் தையல் போடப்பட்டது.
ஜனவரி மாதத்தில் மட்டும் 300 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. பிப்ரவரியில் 251, மார்ச் 13 வரை 129 விலங்குகள் காப்பாற்றபட்டுள்ளன.
அதேபோல, ஜனவரியில் 251, பிப்ரவரியில் 225, மார்ச் 13 வரை 89 பறவைகள் மீட்கப்பட்டுள்ளன. உயிரினங்களை மீட்கும் பணியை தொடர்ந்து செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

