ADDED : ஜூன் 19, 2026 10:13 PM

லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கும் தடை விதித்து துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
இமயமலை தொடரில் அமைந்துள்ள யூனியன் பிரதேசம் லடாக். சமீபத்திய ஆண்டுகளில் லடாக்கிற்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க யூனியன் பிரதேச நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொது இடங்களில் குப்பை வீசுவதற்கு துணை நிலை கவர்னர் சக்சேனா தடை விதித்துள்ளார்.
இது குறித்து யூனியன் பிரதேச நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
பிளாஸ்டிக் தட்டுகள், ஸ்பூன்கள், கோப்பைகள், பைகள், ஸ்ட்ரா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துபவர்கள், விற்பவர்கள் அல்லது வைத்திருப்பவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் குப்பை வீசினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
லே விமான நிலையம் மற்றும் முக்கிய நுழைவு பகுதிகளில் திடீர் சோதனைகள் நடத்தப்படும். சுற்றுலா தலங்களில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
