ADDED : ஜன 29, 2024 11:13 PM
புதுடில்லி: நம் நாட்டில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பதாலும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாலும், சிமி எனப்படும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிமி இயக்கத்துக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், நாட்டுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதன் காரணமாக அந்த அமைப்புக்கு முதன்முறையாக கடந்த 2001ல், மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்தது. இதையடுத்து, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இந்த இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து வருகிறது.
இந்த நிலையில், சிமி இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
நம் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் சிமி அமைப்பு ஈடுபட்டுஉள்ளது. இதனால் அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.