இடுக்கியில் சுற்றுலாவுக்கு விடுக்கப்பட்ட தடை 'வாபஸ்' * நீர்நிலை சுற்றுலா, சாகச பயணம் தடை நீடிப்பு
இடுக்கியில் சுற்றுலாவுக்கு விடுக்கப்பட்ட தடை 'வாபஸ்' * நீர்நிலை சுற்றுலா, சாகச பயணம் தடை நீடிப்பு
ADDED : ஜூன் 01, 2025 11:04 PM

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலாப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட தடை உத்தரவு 'வாபஸ்' பெறப்பட்ட நிலையில், நீர்நிலை சுற்றுலா, சாகச பயணம் ஆகியவற்றிற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கிய நாளான மே 24 முதல் ஒரு வாரம் கன மழை பெய்தது. 2 நாட்களாக மழை குறைந்தது. நேற்று மதியம் 12:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரி மழை 5.56 மி.மீ., பதிவானது. 7 நாட்களில் 150 வீடுகள் சேதமடைந்தன. அதில் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
14 நிவாரண முகாம்கள் செயல்பட்ட நிலையில் மழை குறைந்ததால் பெரும்பாலான முகாம்களில் இருந்து மக்கள் வீடு திரும்பினர். தற்போது உடும்பன்சோலை தாலுகாவில் 2, தேவிகுளம் தாலுகாவில் 1 என 3 நிவாரண முகாம்கள் மட்டும் உள்ளன. அவற்றில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தங்கி உள்ளனர்.
'வாபஸ்':
மாவட்டத்தில் பெய்த கனமழையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கருதி சுற்றுலா பகுதிகளை மூடவும், அது தொடர்பான செயல்பாடுகளுக்கு தடை விதித்தும் மாவட்ட நிர்வாகம் மே 29ல் உத்தரவிட்டது. தற்போது மழை குறைந்ததால் தடை உத்தரவு 'வாபஸ்' பெறப்பட்டது. அதே சமயம் நீர்நிலைச் சுற்றுலா, சாகச பயணம் ஆகியவற்றிற்கான தடை நீடிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படகு சவாரி, டிரெக்கிங், சாகச பயணம் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டன. இரவிகுளம் தேசிய பூங்கா, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஹைடல் டூரிசம் சார்பிலான பூங்காக்கள் நேற்று திறக்கப்பட்டன.
நீர்மட்டம் உயர்வு:
மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு மே மாதத்தில் நீர்மட்டம் உயர்ந்தது. அதன் உயரம் 554 அடி. குறிப்பாக மே மாதம் கோடை காலம் என்பதால் நீர்மட்டம் அதிகரிப்பது அரிது. இதற்கு முன்னர் 1990ல் மே 31ல் நீர்மட்டம் 225 அடியாக இருந்தது. அதே நாளில் இந்தாண்டு 225.3 அடியாக இருந்தது. இதே நாளில் கடந்தாண்டு நீர் மட்டம் 177.28 அடியாக இருந்தது. இந்தாண்டு கோடை மழை நன்கு கை கொடுத்த நிலையில், பருவ மழை வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கி, கனமழையாக மாறியது. அதனால் இந்தாண்டு மே மாதத்தில் அணை நீர் மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.