அரசு அலுவலகங்கள், வளாகங்களில் சிகரெட், புகையிலை பயன்படுத்த தடை
அரசு அலுவலகங்கள், வளாகங்களில் சிகரெட், புகையிலை பயன்படுத்த தடை
ADDED : நவ 08, 2024 07:47 AM
பெங்களூரு: அரசு அலுவலகங்கள், வளாகங்களில் சிகரெட் புகைக்க, பாக்கு பொருட்களை பயன்படுத்த, முழுமையாக தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, கர்நாடக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவு:
புகை பிடிப்பது, புகையிலை, பாக்கு பொருட்களை உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பொது இடங்களில் இத்தகைய பொருட்கள் பயன்படுத்துவதற்கு, அரசு தடை விதித்துள்ளது.
எச்சரிக்கைக்கு பின்னரும், அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகங்களில் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.
ஊழியர்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டும், பொது மக்களையும், ஊழியர்களை காப்பாற்றும் நோக்கிலும், இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி அனைத்து அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகங்களில் சிகரெட் புகைப்பதற்கு, புகையிலை, பாக்கு பொருட்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, எச்சரிக்கை பலகையை அலுவலகத்தில் வைக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி, எந்த அரசு அலுவலகம் அல்லது வளாகத்தில், புகை பிடிப்பது, பான் மசாலா, குட்கா, புகையிலை பயன்படுத்துவது தெரிந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.