ADDED : மார் 14, 2024 04:12 AM

பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், வார இறுதி விடுமுறை நாட்களில் நண்பர்களுடன், சுற்றுலா செல்ல விரும்புவர். குறிப்பாக வேலை பளுவால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைப்பதற்காக, மலையேற்றம் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவர். இத்தகையவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது பானந்திமாரி பெட்டா.
ராம்நகரின் கனகபுராவில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் உள்ளது கோனனதொட்டி கிராமம். இங்கு உள்ளது பானந்திமாரி பெட்டா. சுற்றுலா பயணியரால் கரடி பெட்டா என்றும் அழைக்கப்படுகிறது. அடிவாரத்தில் இருந்து மலை உச்சி 2,090 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
அடிவாரத்தில் இருந்து செல்லும்போது, ஏராளமான மலர்களின் நறுமணத்தில், சுற்றுலா பயணியர் மலைக்கு ஏறிச் செல்லலாம். மலை அடிவாரத்தில் இருந்து பாதி துாரம் வரை, பாதை எளிதாக இருக்கும்.
அதன்பின்னர் செங்குத்தாகவும், கரடுமுரடாகவும் பாதை அமைந்திருக்கும். மலை மீது ஏறிச் செல்லும்போது, கிராம மக்கள் விறகு சேகரிப்பது, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதையும் கண்கூடாக பார்க்கலாம்.
மலை உச்சிக்குச் சென்ற பின்னர், உச்சியில் இருந்து கீழே உள்ள கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்கள், வீடுகளை பார்ப்பது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அக்டோபர் முதல் மார்ச் வரை, பானந்திமாரி பெட்டாவில், மலையேற்றம் செல்ல ஏற்ற காலம். மலையேற்றத்திற்கு ஏற்ற காலணி அணிந்து செல்வது நல்லது. தண்ணீர், குளுக்கோஸ் எடுத்து செல்வதும் நல்லது.
பெங்களூரில் இருந்து கோனனதொட்டி கிராமம், 65 கி.மீ., துாரத்தில் உள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் கனகபுரா சென்று, அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்லலாம். கார், பைக்குகளில் செல்பவர்கள், மலை அடிவாரத்திற்குச் சென்று, அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டும் செல்லலாம்.

