பாங்காக் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 130 பேர் அவதி
பாங்காக் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 130 பேர் அவதி
ADDED : ஜூலை 05, 2025 05:54 PM

கோல்கட்டா: கோல்கட்டா விமான நிலையத்திலிருந்து பாங்காக் புறப்பட இருந்த லயன் ஏர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் 130 பேர் கடும் அவதி அடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்காக் நோக்கி, தாய்லாந்து நாட்டின் லயன் ஏர் நிறுவன விமானம் புறப்பட தயாரானது.
போயிங் தயாரிப்பான 737-800 மாடலை சேர்ந்த இந்த விமானத்தில்,130 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்கள் இருந்தனர். புறப்படும் நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனால் விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. தக்க நேரத்தில் தொழில்நுட்ப பிரச்னை கண்டறியப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோளாறை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தாய்லாந்திலிருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்ததும், விமானத்தில் இருந்த 130 பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து இன்று விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனம் அறிவித்தது.
இதனால் அவதிக்கு ஆளான பயணிகள் 130 பேரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விமானம் நாளை அதிகாலை 2.30 மணியளவில் பாங்காக்கிற்கு புறப்படும். தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது' என்று தெரிவித்துள்ளது.