ADDED : நவ 27, 2024 03:06 AM

புதுடில்லி,
வங்கதேசத்தில் கைது செய்யப்பட்ட ஹிந்து அமைப்பின் தலைவரை விடுவிக்கக்கோரி, நீதிமன்றத்தை முற்றுகையிட்ட, ஹிந்து அமைப்பினர் மீது, போலீசார் தடியடி நடத்தினர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. கடந்த மாதம் 30ல் ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக நேற்று முன்தினம் இவரை, போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவையும், அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், சிட்டங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிருஷ்ண தாசை, போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, ஹிந்து மத துறவி கிருஷ்ண தாசை சிறையில் அடைத்த வங்கதேச அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியில் போராடும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை வங்கதேச அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
போராட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினர் மீது தடியடி நடத்திய போலீசார். இடம்: தாகா, வங்கதேசம்.