இந்தியா தான் ஒரே கதி; எல்லையில் குவியும் வங்கதேசத்தினர்; ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய அவலம்
இந்தியா தான் ஒரே கதி; எல்லையில் குவியும் வங்கதேசத்தினர்; ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய அவலம்
UPDATED : ஆக 08, 2024 10:54 AM
ADDED : ஆக 08, 2024 10:48 AM

புதுடில்லி: வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததால், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதி ஏராளமானோர், இந்தியா வர முயற்சிக்கின்றனர். எல்லையில் குவிந்துள்ள அவர்களை பி.எஸ்.எப்., வீரர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு தொடர்பாக, ஒரு மாதமாக நடந்த மாணவர் போராட்டங்களில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தங்கி உள்ளார். அங்கு ராணுவ ஆட்சி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவி ஏறு்கிறது.
500க்கும் மேற்பட்டோர்...!
ஆட்சி மாற்றத்தின் எதிரொலியாக, வங்கதேசத்தில் இருந்து நேற்று 500க்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு வர முயற்சி செய்தனர். இந்திய எல்லையில் குவிந்த அவர்களை பி.எஸ்.எப்., வீரர்கள் திருப்பி அனுப்பினர். இந்தியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் வங்கதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வந்ததாக தெரிகிறது.
எச்சரிக்கை
அந்நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக, மக்களில் பலர் இந்தியாவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எல்லையோர கிராமங்களில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க அரசும், எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.