கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் பஸ் மோதினால் நிவாரணம் மறுப்பா? : சீமான் கேள்வி
கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் பஸ் மோதினால் நிவாரணம் மறுப்பா? : சீமான் கேள்வி
ADDED : ஆக 29, 2025 04:16 AM

சென்னை: 'கள்ளச்சாராயம் குடித்து இறந்தால், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் தி.மு.க., அரசு, கட்டுப்பாடில்லாமல் ஓடும் பஸ் மோதி இறந்தால், நிவாரணம் வழங்க மறுப்பது வெட்கக்கேடு' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த, 2021 செப்டம்பரில், புதுக்கோட்டை மா வட்டம், துடையூர் அருகே, சுரங்கப் பாதையில், மழை வெள்ளம் தேங்கியபோது, அரசு பெண் டாக்டர் சத்யா, அந்த நீரில் மூழ்கி இறந்தார்.
அதே ஆண்டு, டிசம்பரில், மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றிய கார்த்திகேயன், அதிவேகத்தில் வந்த அரசு பஸ் மோதி உயிரிழந்தார். இவர்களுக்கு, நிவாரண தொகையை இன்று வரை வழங்கவில்லை.
அதேபோல், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் மணிக்குமார், கட்டுப்பாடற்ற அரசு பஸ் மோதி உயிரிழந்தார். மற்றொரு டாக்டர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்களுக்கு நிவாரணம் வழங்காத தி.மு.க., அரசு, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது.
ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த டாக்டர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க மறுப்பது வெட்கக்கேடனாது. எனவே, உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு, தலா 2 கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.