ADDED : டிச 11, 2025 06:31 PM

டாகா: வங்கதேசத்தில் பிப்.,12ல் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தது. இதில் அந்நாட்டின் முக்கிய கட்சிகள் புறக்கணித்தன. ஷேக் ஹசீனா வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்றார். ஆனால், சில மாதங்களில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இது குறித்து அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீனுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில், அடுத்தாண்டு பிப்.,12ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் கமிஷனர் நஸீர் உதீன் டிவி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்துள்ளார்.
மொத்தம் 300 தொகுதிகளை கொண்ட வங்கதேச பார்லிமென்ட் தேர்தலுக்கு நாளை( டிச.,12) முதல் டிச., 29 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை டிச.,29 முதல் 2026 ஜன.,4 வரை நடைபெறும்.
இதன் முடிவுகளை எதிர்த்து ஜன., 11ம் தேதி வரை முறையிடலாம். அதன் மீதான முடிவு ஜன.12 அறிவிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஜன.,20ம் தேதி கடைசி நாள்.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, முகமது யூனுஸ் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அக்கட்சியால் தேர்தலில் போட்டியிட முடியாது. இதையடுத்து மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி, ஜமாத் - இ - இஸ்லாமி கட்சி இடையே இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.
வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பின் அந்நாட்டில் நடக்கும் 13வது பொதுத்தேர்தல் இதுவாகும்.

