விசா முடிந்து தங்கிய வங்கதேச பெண்ணை திருப்பி அனுப்ப உத்தரவு
விசா முடிந்து தங்கிய வங்கதேச பெண்ணை திருப்பி அனுப்ப உத்தரவு
ADDED : ஜன 20, 2024 06:12 AM
பெங்களூரு: விசா காலம் முடிந்தும், பெங்களூரில் வசிக்கும் வங்கதேசத்துப் பெண்ணை, அவரது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும்படி, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வங்கதேசத்தை சேர்ந்தவர் ருக்திமா கானம், 46. இவர், இந்தியாவின், ஜனார்த்தன ரெட்டியை காதலித்து, 2017 டிசம்பர் 25ல், திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஜனார்த்தன ரெட்டி இஸ்லாம் மதத்துக்கு மாறினார். சில ஆண்டுகள் தம்பதி சென்னையில் வசித்தனர்.
நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தம்பதி பிரிந்தனர். ருக்திமா தற்போது பெங்களூரில் வசிக்கிறார். இவரது விசா காலம் 2019ல் முடிந்தது. சுற்றுலா விசாவாக மாற்றிக்கொண்டார். இதுவும் 2022 ஆகஸ்ட் 20ல் காலாவதி ஆனது. விசாவை நீட்டிக்கும்படி எப்.ஆர்.ஆர்.ஓ., எனும் வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
விசாவை நீட்டிக்க மறுத்த எப்.ஆர்.ஆர்.ஓ., நாட்டை விட்டு வெளியேறும்படி கூறியது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ருக்திமா மனு தாக்கல் செய்தார்.
விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், 'ஆவணங்கள் இல்லாமல், இந்திய மண்ணில் இருக்க வெளிநாட்டவர் உரிமை கொண்டாட முடியாது' என கருத்து தெரிவித்தது.
அப்போது எப்.ஆர்.ஆர்.ஓ., சார்பில் ஆஜரான டெபுடி சாலிசிடர் ஜெனரல் சாந்தபூஷண், 'மனுதாரரின் விசாவை நீட்டிக்க கூடாது என, இவர் வசிக்கும் பகுதியின் போலீசார், எப்.ஆர்.ஆர்.ஓ.,வுக்கு சிபாரிசு செய்துள்ளனர். தற்போது மனுதாரரை கணவர் பிரிந்துள்ளார். பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. இவர் இந்தியாவில் தங்க, அனுமதிக்க கூடாது' என வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ருக்திமாவின் மனுவை தள்ளுபடி செய்தது. அவரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும்படி, எப்.ஆர்.ஆர்.ஓ.,க்குஉத்தரவிட்டது.